ஒற்றைக் கால் ஊன்றி வான் நோக்கி கைகள் கூப்பி முழு முதல் தனை முணு முணுத்து முற்றும் திறக்க முயன்று கொண்டிருந்தன மரங்கள்! விழுந்து கிடந்த இலைகளில் விசும்பல் ஏதுமில்லை மண் மீது விழுந்து தொழுகின்றனவோ யாம் அறியோம்!
ஒரு திருமண வரவேற்ப்பு விழாவுக்கு போயிருந்தேன். மதுப் போத்தில்களை காலி செய்த சிலர் நிறை வெறியில் குத்தாட்டம் போட்டனர்! அப்போது தோன்றியது இப்படி…! திருமண வரவேற்ப்பு விழா மது அருந்திய சிலர் தமை மறந்து ஆடினர் அங்கு ஆடியவர்கள் மனிதர்களா? இல்லை அவர்கள் அருந்திய மதுப் போத்தில்கள்!
வானில் வெடித்துச் சிதறும் மத்தாப்புக்களை நானும் மகளும் பார்த்துக் கொண்டிருந்தபோதும் அதில் பெரிய மகிழ்ச்சி ஏற்படவில்லை. மகளைத் திரும்பி பார்க்கிறேன். சிரிக்கிறாள்… அந்த நொடியில்… சுற்றிலும் பல வண்ண மத்தாப்புக்கள் வெடித்துச் சிதறிய போதும் மகிழாத உள்ளம் உன் ஒற்றைச் சிரிப்பில் உடைந்து சிதறியது!
காலை நேரம். யன்னலூடாக வெளியே பார்க்கிறேன். பனி பொழிந்து காணுமிடமெங்கும் வெள்ளையாக காட்சி அளித்தது... சூரியன் தன் கரங்களால் பூமிப் பெண்ணை உரசிப் பார்க்கிறான்... மெல்ல மெல்ல பனி கரைகிறது... அப்போது தோன்றியது இப்படி... விதவைக் கோலம் பூண்டுவிட்டாள் பூமிப்பெண் என்றெண்ணி ஆதவனும் மேலிருந்து பல்லிளித்தான்! அதற்கிசைந்து அவள் தன் வெள்ளை ஆடை மெல்ல மெல்ல களைகிறாள்!